வங்கி கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூண்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ. 20 லட்சம் கோடி
கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து, பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக அறிவிப்புகளை வெளியிட்டார். பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரெப்போ விகிதம் குறைப்பு
நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரெப்போ விகிதம் மேலும் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுகிறது. 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
விலை உயரும்
2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கும். வேளாண் துறை வளர்ச்சி நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. மானாவாரி சாகுபடி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கலாம். உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இஎம்ஐ செலுத்த அவகாசம்
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாகவும், கொரோனா இடையூறு காரணமாகவும் வங்கிக்கடன் தவணைகளை செலுத்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை கூடுதலாக மூன்று மாத அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.