எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

திருமணம், விவாகரத்து

தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட அவர், கடந்த 2010-ம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து, பின்னர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தார்.

புற்றுநோய் சிகிச்சை

அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று பெரும் போராட்டத்திற்கு பிறகு மீண்டார். அதனையடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சை கருத்து

இந்த நிலையில் நேபாள அரசு, தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு நடிகை மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து, புதிய வரைபடத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்ததுடன், ‘நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

கடும் எதிர்ப்பு

இதனால் மனிஷா கொய்ராலாவுக்கு இந்தியாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. “இந்தியாவில் சம்பாதித்து சாப்பிட்டு விட்டு எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கம் இல்லையா? எல்லை பிரச்சினையில் நாடுகள் பேசி தீர்வு காணட்டும். தனிநபர் பேசக்கூடாது. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நேபாளம் சென்று விடுங்கள்” எனபது போன்ற கண்டன பதிவுகள் வெளியாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here