‘ஆம்பன்’ புயல் கரையைக் கடந்ததன் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘ஆம்பன்’ புயல்
மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த ஆம்பன் புயல் கொல்கத்தாவில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த புயல் தமிழகத்தில் பெரிய சேதங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சீதோஷண நிலையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலையை ஏற்படுத்தியது.
அனல் காற்று வீசும்
ஏற்கனவே அக்னி வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்து இருக்கும் நிலையில், புயலின் தாக்கமும் தற்போது சேர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வட மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் எனவும் அந்த பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.