புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 17ந் தேதி வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

டாஸ்மாக் திறப்பு, வழக்கு

ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு 2 நாட்கள் விற்பனை நடைபெற்றது. உரிய விதிமுறைகள் பின்பற்றவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, மது விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

மீண்டும் திறப்பு

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பின் கடந்த 16ந் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மது விற்பனை நடந்து வருகிறது.

விற்பனையில் சாதனை

டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்த மதுப்பிரியர்கள், சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர். முதல் நாளான 16ந் தேதி 163 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது நாளான 17ந் தேதி 133 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றது.

மதுக்கடை திறக்க அனுமதி

இந்நிலையில், புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அனுமதி அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here