ஏழை மக்களுக்கு இன்றைய தேவை கடன் அல்ல பணம் என்றும் மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவுமாறும் மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 86,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சலுகைகள் அறிவிப்பு
கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 13ம் தேதி முதல் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.
வங்கி கணக்கில் செலுத்துங்கள்
இந்த நிலையில், டெல்லியில் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் செய்வதைப் போலவே, அரசாங்கமும் மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட வேண்டும் என்றார்.
ராகுல் எச்சரிக்கை
நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இது ஒரு பேரழிவு பிரச்சினையாக மாறும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் உதவி செய்யாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் எழ முடியாது எனக் கூறிய அவர், பொருளாதார தொகுப்பை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.