கேரளாவில் பெண் எம்.எல்.ஏ. ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள “அம்மையும் குஞ்சும்” வாட்ஸ் அப் குரூப் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“அம்மையும் குஞ்சும்”
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா தொகுதியில் “அம்மையும் குஞ்சும்” (தாயும் குழந்தையும்) என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி மக்களின் மனதை கவர்ந்துள்ளார் பெண் MLA வீணா ஜார்ஜ். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் பலர் MLA வீணா ஜார்ஜ் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்து, எளிய முறையில் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர்.
கர்ப்பிணிப் பெண்
கண்ணூர் மாவட்டம் இரிட்டியை சேர்ந்த ரின்சி என்ற பெண்ணின் கணவர் பத்தனம்திட்டாவில் வேலை பார்ப்பதால் சில மாதங்களுக்கு முன்பு அங்கு குடிப்பெயர்ந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட தருணத்தில் ரின்சி நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். மகப்பேறு காலத்திற்காக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த அவர், இதுகுறித்து ஆரன்முலா தொகுதி எம்.எல்.ஏ வீணா ஜார்ஜை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
அனுமதி மறுப்பு
கண்ணூர் மாவட்டம் அப்போது கொரானா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் ரின்சியை அங்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்த எம்.எல்.ஏ வீணா ஜார்ஜ், ரின்சியை உடனிருந்து பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை பணியமர்த்தினார். ரின்சியின் தாய் உடனிருந்தால் எப்படி கவனித்துக்கொள்வாரோ, அதேபோல் அவரை கவனித்துக்கொள்ள வீணா ஜார்ஜ் ஏற்பாடுகள் செய்திருந்தார்.
வாட்ஸ் அப் குரூப்
ரின்சியை போல் தனது தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் ஊரடங்கு காலத்தில் மாதாந்திர ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் செல்ல முடியாமல் தவிப்பதை உணர்ந்த MLA வீணா ஜார்ஜ், அவர்களுக்கு உதவ வேண்டுமென முடிவெடுத்தார். அதன்மூலம் உருவானதுதான் இந்த “அம்மையும் குஞ்சும்” என்ற வாட்ஸ் அப் குரூப். ஆரன்முலா தொகுதியில் இந்த வாட்ஸ் அப் குரூப் நான்கு பிரிவுகளாக செயல்படுகிறது. அதில் சுமார் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் வரை இணைந்துள்ளனர்.
உடனுக்குடன் தீர்வு
“அம்மையும் குஞ்சும்” வாட்ஸ் அப் குரூப்பில் மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் கவுன்சிலிங் கொடுக்க கூடிய மனநல ஆலோசகர்கள் என பலரும் உள்ளனர். இவர்கள் குழுவில் உள்ள யாரேனும் சந்தேகமோ, ஆலோசனையோ கேட்டால் உடனடியாக பதில் அளிக்கின்றனர். அலைச்சல் இல்லாமல், செலவு இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ள MLA வீணா ஜார்ஜ்க்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.