தமிழகத்தில் மே 11-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

முடங்கிய திரைத்துறை

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு உட்பட திரைத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டதால், ஒட்டுமொத்த திரையுலகும் முடங்கியது.

அரசுக்கு கோரிக்கை

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதாகவும், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய Post production பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்மெனவும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு அனுமதி

இதனை பரிசீலித்த தமிழக அரசு, மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய Post production பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

* படத்தொகுப்பு (Editing) – (அதிகபட்சம் 5 பேர்)

* குரல் பதிவு (Dubbing) – (அதிகபட்சம் 5 பேர்)

* கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் ((VFX/CGI) – (10 முதல் 15 பேர்)

* டி.ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் – (அதிகபட்சம் 5 பேர்)

* பின்னணி இசை (Re-Recording) – (அதிகபட்சம் 5 பேர்)

* ஒலிக்கலவை (Sound Design/Mixing) – (அதிகபட்சம் 5 பேர்)

எனவே post production பணிகளை மேற்கொள்ளும் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய – மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here