தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மதுவிற்பனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மே 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, நேற்று முதல் விற்பனை நடைபெற்றது.
கண்டனம்
40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகமடைந்த மது பிரியர்கள், கைத்தட்டியும் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று அவர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் திறப்புக்கு அரசியல் கட்சியினரும், திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அதிரடி உத்தரவு
இதற்கிடையை, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கமல் வரவேற்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.