வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 106 டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தென் தமிழக மலைப் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸிலிருந்து குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இப்பகுதியில் கடல் சீற்றத்துடனும் அவ்வப்போது மிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் அந்தப் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.