திருமணம் குறித்த தகவலை இப்போது தான் உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா அதுகுறித்து பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
பிஸி நடிகை
கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’, ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் ‘தி கேர்ள்ஃப்ரண்ட்’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.
நேரம் வரட்டும்
‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் சில வருடங்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், விஜய் தேவரகொண்டாவுடன் நடக்கும் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பதிலில்; “திருமணம் குறித்த தகவலை இப்போது நான் உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை. அதுகுறித்து பேச வேண்டிய நேரம் வந்தால், கண்டிப்பாக நாங்கள் தெரிவிப்போம்” எனக் கூறியிருக்கிறார்.















































