பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சிறந்த பேச்சாளர்

திமுகவின் சிறந்த பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது தானும் வெளியேறினார். பின்னர் வைகோ மதிமுக என்ற புதிய தொடங்கிய போது நாஞ்சில் சம்பத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. வைகோவிற்கு இணையான பேச்சாற்றல் கொண்ட நாஞ்சில் சம்பத், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.

அரசியலை விட்டு விலகல்

அதன்பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தப் பதவியில் இருந்து திடீரென அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் அங்கிருந்தும் வெளியேறினார். பிறகு அரசியலைவிட்டு விலகுவதாகவும் கூறினார்.

முக்கிய பொறுப்பு?

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா சமீபத்தில் புதிய கட்சி தொடங்கிய நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை அவர் இணைத்துக் கொண்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யை இன்று அக்கட்சி அலுவலகத்தில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here