நாக சைதன்யா மற்றும் அகிலை எப்படி வளர்த்தோம் என்பது குறித்து அமலா அக்கினேனி உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
முன்னணி நடிகை
1980 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அமலா. தமிழில் மைதிலி என்னை காதலி, மெல்லத் திறந்தது கதவு, உன்னை ஒன்று கேட்பேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய பொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொண்டார். இது நாகார்ஜுனாவின் 2வது திருமணமாகும். முதல் மனைவி லட்சுமியை பிரிந்த நாகர்ஜூனாவிற்கு நாக சைதன்யா இருந்தார். 
சுதந்திரம்
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது இரு மகன்கள் பற்றி அமலா பேசியிருந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது; “திருமணத்தின் போது நாக சைதன்யா சென்னையில் வளர்ந்து படித்தார். அதனால் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. அவரைப் பற்றி அதிகம் தெரியாது. கல்லூரிக்கு ஹைதராபாத் வந்தபோதுதான் அவரை முழுமையாக அறிந்தேன். நாக சைதன்யா அற்புதமானவர், பொறுப்பானவர். தந்தையின் பேச்சை மீறமாட்டார். அகில் என் மகன் என்பதால் என் தாக்கம் அதிகம். இருவரையும் சுதந்திரமாக வளர்க்க நானும் நாகார்ஜுனாவும் முடிவு செய்தோம். அவர்கள் முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும். அப்போது தோல்வி வந்தாலும் கற்றுக்கொள்வார்கள். இந்த வழியில் இருவருக்கும் சில தோல்விகள் வந்தன. ஆனால், சொந்த முடிவெடுக்கும் அனுபவம் கிடைத்தது” என்றார்.















































