சபரிமலையில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
குவியும் பக்தர்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்ச்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்து வருகின்றனர். கோயில் நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இரண்டு இலட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டாலும், நெரிசல் காரணமாக பல பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளதாக வெளியாகும் செய்தி வருத்தமளிக்கிறது. 
வேதனை
சபரிமலையில் நடை திறக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதன் காரணமாக, பக்தர்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளாமல் திரும்பிவிட்டதாகவும், பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய திட்டமிடல் இல்லை என்றும், எட்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் பக்தர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது.
வலியுறுத்தல்
சுவாமி அய்யப்பனை காண முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் செல்வதால், அடிப்படை வசதிகளை செய்து தருவதும், வரிசையை ஒழுங்குபடுத்தி நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் அவசியம். தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சரை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சுவாமி அய்யப்பனை காண வரும் அனைத்து பக்தர்களுக்கும் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவும், பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தி அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.















































