சட்டவிரோத கார் இறக்குமதி டொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கேரளாவில் உள்ள பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை
பூட்டான் நாட்டிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்யும் இந்த கும்பலை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம், குட்டிப்புரம், திருச்சூர் போன்ற கேரளாவின் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சிக்கலா?
பிரபல நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் வீடுகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர். சட்டவிரோத கார் இறக்குமதியில் மோட்டார் வாகனத் துறையின் ‘பரிவாஹன்’ இணையதளம் உட்பட தங்கள் இணையதளத்திலும் 10 முதல் 15 விதமான மோசடிகள் மற்றும் ஆவணத் திருத்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சோதனையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய சட்டத்தின்படி பழைய வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.