போதைப் பொருள் வழக்கில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகார்
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய்யின் பீஸ்ட், ஜிகர்தண்டா–2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், அஜித் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
பரபரப்பு குற்றச்சாட்டு
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல், படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது.
அதிரடி கைது
இதனிடையே கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை ஒரு ஹோட்டலில் சோதனை நடத்திய போது அங்கிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி செல்வதாக சொல்லும் சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனைத்தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று எர்ணாகுளம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். காலை முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஷைன் டாம் சாக்கோவின் பதில் திருப்திகரமாக இல்லை எனக்கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.