சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (MAHER) 3 சிறப்பான சுகாதார திட்டங்களை தொடங்கியுள்ளது.
முத்தான மூன்று திட்டங்கள்
உயர்கல்வியில் முன்னோடியாக இருக்க பாடுபடும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (MAHER), கடந்த 20 ஆண்டுகளாக தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு மகத்தான சேவையை வழங்கி வருகிறது. சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவுகளின் நலனுக்காக பல்வேறு சுகாதாரத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் சமூக மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை ஜனவரி 31ஆம் தேதி இந்த நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது. நிறுவனத்தின் வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மீனாட்சி மகப்பேறு திட்டம் – 2025 (MMS), மீனாட்சி மேம்பட கதிரியக்க நோய் கண்டறிதல் திட்டம் – 2025 (MARS) மற்றும் மீனாட்சி அவசரகால அதிர்ச்சி சிகிச்சை திட்டம் – 2025 (METS) ஆகிய மூன்று சுகாதார நலத்திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
கர்ப்பினி தாய்மார்களுக்கான திட்டம்
மீனாட்சி மகப்பேறு திட்டம் 2025, பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைத்தல் மற்றும் நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்தல் என்ற லட்சிய இலக்கோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பினி தாய்மார்கள் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகளான இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட விசாரணைகள், பிரசவத்திற்கு முந்தைய ஸ்கேன்களான அனோமாலி ஸ்கேன், என்டி ஸ்கேன், இதய பரிசோதனை, மருத்துவமனையில் தங்கி இருக்கும்போது உணவு மற்றும் பொது வார்டில் சேர்க்கை ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக பெறலாம். இந்த திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால் சாதாரன பிரசவங்கள் இலவசமாக நடத்தப்படும், அதேநேரத்தில் சிசேரியன் மூலம் பிரசவம் அடையும் தாய்மார்கள் நுகர்பொருட்களின் விலையை மட்டும் ஏற்க வேண்டும். மேலும் கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருந்துகளும், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்படும். இந்த நிறுவனம் மூன்றாவது மூன்று மாதங்களில் ரூ. 2,000/- நிதியுதவியையும், பிரசவத்திற்கு பிறகு ரூ. 10,000/- நிதியுதவியும் அறிவித்துள்ளது. மேலும் ரூ. 2,000/- மதிப்புள்ள குழந்தைகளுக்கான பரிசுப் பொட்டலத்தையும் வழங்குகிறது.
வரப்பிராசதம்
மீனாட்சி மேம்பட கதிரியக்க நோய் கண்டறிதல் திட்டம் – 2025, மலிவு விலையில் மேம்பட்ட ஆய்வுகளை வழங்குகிறது, இது மருத்துவ ரீதியாக ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிராசதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மூளை, முதுகெலும்பு மற்றும் மூட்டுவலி, MRI ஸ்கேன் பரிசோதனைகளுக்கு ரூ. 2,000/- செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகக்குறைந்த விலையாகும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சிடி ஸ்கேன்களுக்கும் ரூ. 750/- முதல் ரூ. 1,250/- வரை மானிய விலையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
வேந்தர் உறுதி
சாலை விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக மீனாட்சி அவசரகால அதிர்ச்சி சிகிச்சை திட்டம் – 2025 தொடங்கப்பட்டுள்ளது. காயம் மற்றும் நோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் முதலுதவி மற்றும் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுன்டு ஸ்கேன் போன்ற விசாரணைகள் உள்ளிட்டவற்றை இலவசமாக பெறலாம், காயங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கான தியேட்டர் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுகுறித்து வேந்தர் தனது உரையில், “நிர்வாகத்தின் இந்த உன்னத முயற்சியை முழுமனதுடன் வரவேற்கிறேன். மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் மருத்துவர்கள் குழுவிற்கு இந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வாழ்த்துக்கள். அவை வழங்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் வேகம் பெரும், மிகுந்த ஆதரவை பெரும் என்பது உறுதி” எனத் தெரிவித்தார். இந்த திட்டங்களின் தொடக்க விழா MAHER-ன் முதன்மை நிறுவனமான காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (MMCHRI) நடைபெற்றது. நிகழ்ச்சியில் MAHER-ன் வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன், இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர், நிறுவனத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. கிருத்திக்கா, பதிவாளர் பேராசிரியர் டாக்டர் சுரேகா வரலஷ்மி, MMCHRI-ன் டீன் பேராசிரியர் டாக்டர் கே.வி. ராஜசேகர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கே. பூபதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.