பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸூம், அன்புமணி ராமதாஸூம் மேடையில் காரசாரமாக விவாதம் நடத்திக்கொண்டதை கண்டு அவர்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது புதுச்சேரி இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராமதாஸ், கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள்கூட ஆகாத ஒருவர் எப்படி இளைஞரணி தலைவராக முடியும்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது அதனை பொருட்படுத்தாத டாக்டர் ராமதாஸ், “கட்சியை உருவாக்கியது நான். கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நான் தான் நியமிப்பேன். இதில் உடன்படாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம்” என்று காட்டமுடன் கூறினார்.
தனி அலுவலகம்
இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி ராமதாஸ் ஒரு கட்டத்தில், தனக்கு சென்னை பனையூரில் அலுவலகம் உள்ளது என்றும் தன்னை சந்திக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அங்கு வந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் கூறி செல்போன் எண்ணையும் அறிவித்தார். பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே இருந்த பாமகவினர் டாக்டர் ராமதாஸ் இருந்த காருக்கு வழிவிடாமல் ”அன்புமணி வாழ்க” என கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.