தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு மேலும் 20 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளதை பலரும் பாராட்டு வருகின்றனர்.
நடிகை
தெலுங்கில் மூத்த நடிகராக இருக்கும் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், தொகுப்பாளினியாகவும் செயல்பட்டு வருகிறார். தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக சேவை
இது ஒருபுறம் இருக்க சினிமாவைத் தாண்டி சமூக சேவை பணிகளிலும் லட்சுமி மஞ்சு ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே 30 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் மேலும் 20 அரசுப் பள்ளிகளை அவர் தத்தெடுத்துள்ளார். தெலுங்கானாவில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள 20 அரசுப் பள்ளிகளை லட்சுமி மஞ்சு தத்தெடுத்திருக்கிறார்.
அறிவுரை
இதுகுறித்து நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில்; “மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து இருக்கிறேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம். எத்தனையோ பேர் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்” என்று கூறியுள்ளார்.