உதகை அருகே நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
விறுவிறு படப்பிடிப்பு
கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ‘சூர்யா 44’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்தது. அங்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே படக்குழு சென்னை திரும்பியது. அதையடுத்து கடந்த சில நாட்களாக ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து வந்தது.
அதிர்ச்சி
இந்நிலையில், ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கும் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.















































