நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகை திரிஷா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரிஷா உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்காக அவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்ளித்தார். இதனையடுத்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். மன்சூர் அலிகானின் மன்னிப்பையடுத்து நடிகை திரிஷா எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.