தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரங்கள் தொடர்பாக மனு அளித்தனர்.
கவர்னருடன் சந்திப்பு
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பெஞ்சமின் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது சட்டம், ஒழுங்கு மற்றும் செந்தில் பாலாஜி விவகாரங்கள் தொடர்பாக மனு அளித்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு மனு அளித்துள்ளனர். மேலும் முறைகேடாக ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்ததாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடுமாறு அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்படி குற்றம்
ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசிகையில்; “உச்சநீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையிலேயே, இன்றைக்கு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கக்கூடிய சூழலில் உள்ளார். அவர் இன்றும் அமைச்சராக உள்ளது சட்டப்படி குற்றமாகும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட உடனேயே அவரை அமைச்சரவையிலிருந்து முதலமைச்சர் நீக்கி இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனை தற்போது திமுகவின் அறிவாலயமாக மாற்றப்பட்டுள்ளது”. இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.