ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோர விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7.30 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு, அடுத்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த வழித்தடத்தில் வந்த பெங்களூரு – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 900க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப் பணி மும்முரம்
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். நேற்றிரவு தொடங்கிய பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற கோரமான ரயில் விபத்து நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்து காரணமாக ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் ஆய்வு
ஒடிசா ரயில் விபத்து குறித்து சென்னையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர். மூன்று ரயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
நிவாரணம்
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.