கம்பம் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை மிரட்டி வரும் ‘அரிசிக்கொம்பன்’ யானையை பிடிக்க “ஆப்ரேஷன் அரிசிக்கொம்பன்” இன்று ஆரம்பமாக உள்ளது.
குடியிருப்புகள் நாசம்
கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிசிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்பு தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் அந்த யனையை வனத்துறையினர் விட்டனர். ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது. பின்னர் கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை நாசம் செய்த அரிசிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டாகசம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டிய யானை, இருசக்கர வாகனத்தில் சென்ற பால்ராஜ் (65) என்பவரையும் தாக்கியது. தொடர்ந்து வனத்துறை ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் தாக்கியது.
“ஆப்ரேஷன் அரிசிக்கொம்பன்”
பின்னர் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி தோட்டப் பகுதிகளின் வழியே சென்று நேற்று முன்தினம் இரவு ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை அருகில் உள்ள காப்புக்காட்டில் உள்ள அடர்ந்த வனத்தில் நிலை கொண்டுள்ளது. யானையின் நடமாட்டம் குறித்து 12 வனத்துறை குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் யானையை பிடிக்க, 3 கும்கி யானைகள் கம்பத்தில் தயார் நிலையில் உள்ளன. இன்று (மே 31), 3 கும்கிகளையும் காப்புக்காடு பகுதிக்குள் அழைத்து செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 5 பேர் கொண்ட மயக்க ஊசி நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர். திமிறி மிரட்டும் யானைகளை சமிஞ்சை மொழிகளை பேசி மிக தைரியமாக நுழையும் பழங்குடியினர் 4 பேர் நேற்றிரவு கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசிக்கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர, கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். அரிசிக்கொம்பனை பிடிக்கும் ஆபரேஷன் இன்று (மே 31) முதல் தொடங்கலாம் என கூறப்படுகிறது.