நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
மாஸ் ஹிட்
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த திரைப்படம் திரிஷ்யம். இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 125 கோடிகளுக்கு மேல் வசூலித்து வசூல் சாதனையும் படைத்தது. மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
கொரிய மொழியில் ரீ மேக்
தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் ஹாசன், கௌதமி நடிப்பில் உருவானது. தமிழிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கொரிய மொழியில் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்யப் போவதாக கேன்ஸ் பட விழாவில் தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் அந்தோலஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய திரைப்படம் முதன்முதலாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இந்த வெற்றியை பட குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.