‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்த நடிகை அதா சர்மா விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
சர்ச்சை
மேற்கு வங்காள இயக்குநரான சுதீப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படத்தின் டிரெய்லரில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்சிகள் அமைந்திருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. “தி கேரளா ஸ்டோரி” படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.
எதிர்ப்பு – ஆதரவு
இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் கேரளாவில் பல திரையரங்குகளில் இப்படம் வெளியிடுவதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேற்கு வங்காளத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விஷயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தார். அதேவேளையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் படத்திற்கு வரி விலக்கு அறிவித்தனர்.
தற்செயலாக நடந்தது
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கிடையே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இவ்வாறு பல எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், சமீபத்தில் அப்படத்தில் நடித்திருந்த நடிகை அதா சர்மாவுக்கு விபத்து ஏற்பட்டது. அவர் விபத்தில் சிக்கிய தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதுகுறித்து நடிகை அதா சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “இது தற்செய்லாக நடந்த விஷயம்தான், விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம். தொடர்ந்து என்னை போனில் விசாரித்தவர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.