“அரிகொம்பன்” யானையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேதப்படுத்திய யானை
கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கனல் சந்தன்பாறை பகுதியில் விளை நிலங்களில் புகுந்து “அரிகொம்பன்” என்ற காட்டு யானை கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் ஊருக்குள் புகுந்த அந்த காட்டு யானை, வீடுகள், கடைகள், ரேஷன் கடை என அனைத்தையும் தாக்கி மொத்தமாக சேதப்படுத்தியது. 20 பேரை கொன்று அட்டகாசம் செய்த அந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, காட்டுக்குள் விடப்பட்டது.
அரிகொம்பன் வரலாறு
தற்போது தமிழகத்தின் மேகமலை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அரிகொம்பன் யானையின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேனி மாவட்ட வன அலுவலகர் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த யானையின் கதையை மையமாக வைத்து “அரிகொம்பன்” என்ற மலையாள திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை சஜித் யாஹியா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதாகவும், படப்பிடிப்பு முழுவதும் இலங்கையில் நடக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
யானை கதை
யானையை மையமாக வைத்து வெளியான கும்கி, காடன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், தற்போது உருவாக இருக்கும் அரிகொம்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யானையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.