உலக தமிழர்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் கொண்டாட்டம்
தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாகவே பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் வகையில் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இதனை கொண்டாடி மகிழ்கின்றனர். கேரளாவில் வைகாசி விஷு என்ற பெயரில் கொண்டாடப்படும். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தை கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி நேரம் 11 நிமிடம் 41 நொடிகள் ஆகின்றன. இதுவே தமிழ் வருடத்திலும் கால அளவாகும்.
இனிப்பும்,கசப்பும் கலந்து தான் வாழ்க்கை
சித்திரை மாதம் தமிழர் புத்தாண்டு முந்தைய நாளில் வீடு வாசலை சுத்தம் செய்வது, மேலும் மா, பலா, வாழை என முக்கனிகளில் அலங்கரிக்கவும் செய்கின்றனர். புத்தாண்டு அதிகாலையில் நீராடி வாசலில் கோலமிட்டு புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபடுவர். அது மட்டும் இல்லாமல் மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்கு செல்வது பலகாரங்களை பகிர்வது போன்ற விஷயங்களை வழக்கமாகவே கடைபிடிக்கின்றனர். வாழ்க்கை என்பது கசப்பும் இனிப்பும் கலந்து தான் என்பதை உணர்த்தவே புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். பொதுவாக சூரியனுக்கும், சந்திரனுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதனை வலியுறுத்தும் விதமாக சித்திரை முதல் நாளில் சூரியனையும் அடுத்து வரும் சித்திரை பௌர்ணமி தினத்தில் சந்திரனையும் சிறப்பாக வழிபடுகின்றனர். துவங்கும் இந்த புத்தாண்டில் நாமும், நாடும் வளம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.