திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களை ஓடஓட துரத்தி தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவைப் பார்த்து நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள்
வடஇந்தியாவில் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்பதால் ஒடிஸா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம், பீகார், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தென்னிந்திய மாநிலங்களில் தஞ்சம் அடைந்து பிழைத்து வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் பல்கி பெருகியுள்ளார்கள். கட்டட வேலை, ஹோட்டல் வேலை, உணவு செய்யும் மாஸ்டர், வடமாநில பிரத்யேக உணவுகளை தயாரிப்பது, மருத்துவமனைகள், அபார்ட்மென்ட்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் கூட வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளதாக தெரிகிறது.
வீடியோ காட்சி
இந்த நிலையில் திருப்பூரில் அனுப்பர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டீக்கடையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக தமிழக தொழிலாளர் ஒருவரை கட்டை, பெல்ட் போன்றவற்றால் துரத்தி துரத்தி அடிப்பதாக கூறும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆதங்கம்
இந்த வீடியோவைப் பார்த்த மதுரை முத்து, தமிழ் இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த வீடியோவில் அவர் பேசியதாவது; “திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில இளைஞர்கள் 100 பேர் பெல்ட், கத்தி, மரக்கட்டை போன்றவற்றை வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் இளைஞர்களை விரட்டி அடிக்கும் காட்சியை பார்த்தேன். தொடக்கத்தில் சிறிய வேலை கேட்டு வந்தார்கள். பின்னர் 10 சதவிகிதம் இருந்தார்கள். தற்போது திருப்பூரில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை 65 சதவிகிதமாக உள்ளனர். இப்போது குடி புகுந்த தமிழ் மக்களை விராட்டி அடிக்கும் அளவிற்கு இளைஞர்கள், அதுவும் தமிழ் இளைஞர்கள் அந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். பாலாபிஷேகம் என இந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வட மாநிலத்தவர்கள் இன்னும் சில நாட்களில் நமக்கு பால் ஊத்திட்டு போக போகிறான். வேலை வாய்ப்பே இல்லாமல் இப்படியே சென்றால் பிச்சை எடுக்கும் கால காலகட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு மதுரை முத்து அந்த வீடியோவில் கூறியுள்ளார்.