சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்கான நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். கடந்த மாதம் முழுவதும் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். இந்த மாதம் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் பக்தர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சிறப்பு ஏற்பாடு
பக்தர்களின் கூட்டத்தால் சிலர் மயக்கமடைந்ததுடன், நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட சிலருக்கு காயமும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. பக்தர்களை கட்டுப்படுத்தவும், உரிய வசதிகள் ஏற்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கவும், நிலக்கல்லில் கூடுதல் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவது உள்பட சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. நிலக்கல்லில் தற்போது 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. மேலும் 1000 வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனி வரிசை
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 90,000 பக்தர்கள் மட்டும் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 16 மற்றும் 19 தேதிகளில் 90,000 பேர் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துவிட்டதால், அந்த தேதிகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.