கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அம்மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மாயம்
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சேர்ந்தவர் ரோஸிலின் மற்றும் பத்மா. லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த இவர்கள் இருவரில், பத்மா கடந்த ஜூன் மாதத்திலும், ரோஸிலின் கடந்த செப்டம்பர் மாதத்திலும் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் காணாமல் போனதால் சந்தேகமடைந்த காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. இரு பெண்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் பெரம்பாவூரைச் சேர்ந்த முகமது சஃபி என்பவருடன் பேசியது தெரிந்தது.
பேரதிர்ச்சி
இதனையடுத்து முகமது சஃபியை கைது செய்து விசாரித்த போது காவல்துறையினர் பேரதிர்ச்சி அடைந்தனர். காணாமல் போன ரோஸிலின் மற்றும் பத்மா ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிந்தது. செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக திருவல்லாவைச் சேர்ந்த பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் முகமது சஃபியின் பேச்சை கேட்டு இரு பெண்களையும் தங்கள் வீட்டில் வைத்து நரபலி கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியான மந்திரவாதி முகமது சஃபி வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்புக் குழு
இந்த நிலையில், இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்கு குழுவை அமைத்து கேரள மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். கொச்சி துணை ஆணையர் சசிதரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுவில் தலைமை விசாரணை அதிகாரியாக உதவி காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பலிவால் நியமிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு திட்டமிட்டு, அதற்கான பணிகளை துவக்கியுள்ளது.