வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
அரசுடமை, வழக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான தொகையையும் உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா இல்லம் அரசின் சொத்தாக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி வாரிசுதாரர்கள் தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
நீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று அண்மையில் உத்தரவிட்டார். ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை 3 வாரங்களில் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆத்மா சாந்தியடையும்
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தீபா, தீபக் ஆகியோரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இன்று ஒப்படைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தனது வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் வீட்டை மீட்பதற்கு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்தாகவும் கூறினார். வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ள்தாக குறிப்பிட்ட தீபா, வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் எனவும் தெரிவித்தார்.