வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலுார், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

நாளை வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் 18 செ.மீ, திருத்தணி 12 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், கேளம்பாக்கம் தலா 11 செ.மீ, செய்யாறு, மேற்கு தாம்பரம் தலா 10 செ.மீ, அரக்கோணம், தேனி மாவட்டம் கூடலுார், பரமக்குடி, வேப்பூர் தலா 9 செ.மீ, திருபுவனம், சோழிங்கநல்லுார் தலா 8 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சூரலக்கோடு, வேலூர் மாவட்டம் மவுலத்துார், நிலக்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பத்துார் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here