‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கொரோனா பரவகைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடக, டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திரையுலகினர் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து வருகிறது.

தொற்று உறுதி

இந்த நிலையில், ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்த இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

இதுதொடர்பாக நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது; “நண்பர்களே. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு திரும்பியதற்காக பிரபஞ்சத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு சம்யுக்தா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here