தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர், பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ – மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அதற்கான பாடத்திட்டங்களை குறைத்தது.
ஆல் பாஸ்
இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ல் துவங்கும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காததால், தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்தாகுமா? என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59 லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.