திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், ஆல் ரவுண்டராகவும் திகழ்ந்தவர் கவில்தேவ். 1978 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் படைத்துள்ளார். 1983ல் இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை அவர் பெற்றுத் தந்தார். 131 டெஸ்ட் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்த ரிச்சர்ட் ஹாட்லீ, இயான் போத்தம் மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கு இணையாக இருந்த ஒரே ஆல்ரவுண்டர் கபில்தேவ் மட்டுமே ஆவார்.
திடீர் மாரடைப்பு
இந்த நிலையில், கபில்தேவிற்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆஞ்சியோபிலாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பிறகு கபில்தேவ் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியான உடன், ஏராளமானோர் அவர் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இதனால் டுவிட்டரில் “kapildev” என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.