ஆந்திர பேருந்து விபத்து தனது மனதை மிகவும் பாதித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையுடன் கூறியுள்ளார். 
கோர விபத்து
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து 21 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதனை
இந்த பேருந்து கோர விபத்து தன்னை மிகவும் பாதித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்திருந்ததாவது, “கர்னூலில் இருந்து வந்த செய்தி என் மனதை மிகவும் பாதித்தது. எரியும் அந்த பேருந்தில் பயணிகள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. சிறு குழந்தைகள் உட்பட ஒரு மொத்த குடும்பமும், இன்னும் பலர் சில நிமிடங்களிலேயே தங்கள் உயிரை இழந்ததை நினைத்து பார்க்கும் போது உண்மையிலேயே பேரழிவை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.















































