‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா ஜோடி மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளது.
ஸ்லிம் பியூட்டி
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடியின் கதாபாத்திரங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா. நடிகை ராஷ்மிகா மந்தனா பற்றி அடிக்கடி பல காதல் கிசுகிசுக்கள் வெளி வருவது வழக்கம். ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த சமயத்தில் அவருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகி தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஜோடி
இந்த நிலையில், இளம் இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் பிரம்மாண்ட ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படத்தில் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா ஜோடி இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. 1854 – 1878 காலகட்ட பிரிட்டிஷ் ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட கதையில் விஜய் தேவரகொண்டா ராயலசீமா யுவனாக நடிக்கிறார். காலகட்டப் பின்னணியில் உருவாகும் இப்படம் தெலுங்கு சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா இடையே ஏதோ இருக்கிறது என்ற செய்தியால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.