தனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளதாக வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
கெடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் இருந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளைர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை தாங்களே மேற்கொள்வோம் என்றும் பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் எனவும் கூறினார்.
அதிமுக ரத்தம்
செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடார்பாக அவர் கூறுகையில்; “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் செங்கோட்டையன் அவர்கள் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்கள் கருத்து தான் ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத் தான் வலியுறுத்துகிறேன். ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்”. இவ்வாறு சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு
அதேபோல் செங்கோட்டையனின் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். “அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகள், மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.