அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.

மனம் திறந்து பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறக்கப்போவதாக சமீபத்தில் செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளைர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; ”அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நல்ல திட்டங்களை இயற்றி இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார்.

உடையக்கூடாது

எம்.ஜி.ஆருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார். ஆன்மீகவாதிகளும் திராவிட தலைவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமை ஜெயலலிதா. தன்னை விமர்சித்த தலைவர்களை எல்லாம் அரவணைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைந்தபிறகு, அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்ததே. அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதால் அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன். 

அடுத்தகட்டம்

முன்னாள் முதல்மைச்சர் தற்போதைய எதிர்க் கட்சிதலைவரை சசிகலா முதலமைச்சராக முன்மொழிந்தார். 2017 ஆட்சியில் அமர்ந்தபிறகு 2019, 2021, 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது. 2024-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம். வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும். எனக்கு நெருங்கிய நண்பர்களை கலந்து கொண்டு அடுத்தகட்ட முடிவு செய்வேன்”. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here