திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் நாயகன் சசிகுமாரை பாராட்டியுள்ளார்.
வசூல் குவிப்பு
அறிமுக இயக்குநர் அபினேஷ் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியில் இருந்தும் இப்படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் சசிகுமாரையும், இயக்குனர் அபினேஷ் ஜீவிந்தையும் பாராட்டினர்.
வாழ்ந்து இருக்கீங்க
இந்நிலையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளது குறித்து நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “யார் படம் சூப்பர் என்று கூறினாலும் மனம் சொக்கி போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என்று சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். அயோத்தி, நந்தன் படங்களை பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக்காக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்து சூப்ப்ப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னார். தர்மதாஸாகவே வாழ்ந்து இருக்கீங்க. சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்தளவுக்கு வாழ்ந்து இருக்கீங்க.
வியக்க வைக்குது
பல காட்சிகளில் கலங்கடிச்சுட்டீங்க. சமீப காலமா உங்களோட கதை தேர்வு என்னை வியக்க வைக்குது சசிகுமார் என ரஜினி சார் சொல்ல சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் குறிப்பிட்டு, அத்தனை பேரை பற்றியும் பேசி ரஜினி சார் வாழ்த்திய ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டும் உங்களுடைய தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்” இவ்வாறு தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்.