பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
துல்லிய தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர் உள்ளிட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்தி உள்ளது. இந்திய கடற்படையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஹேமர் குண்டுகள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தக்க பதிலடி
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “இந்திய ராணுவத்தை எண்ணி பெருமை அடைகிறோம். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர். இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தநொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருமை
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்; “இந்திய ராஅணுவத்தை எண்ணி பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
துணை நிற்போம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும்” எனக் க்றிப்பிட்டுள்ளார்.
தொடக்கம் தான்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில்; ‘ஆபரேஷன் சிந்தூர்’ இது வெறும் தொடக்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புரியும் மொழியில் பதில்
பாஜக முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்; “தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராணுவத்துக்கு பாராட்டு
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்; “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் நமது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓயப்போவதில்லை
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில்; “போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது. எடுத்த காரியம் முடியும் வரை ஓயப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ராயல் சல்யூட்
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில்; “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராணுவத்தின் முகம்
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; “ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார்.