ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாக விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.
அதிரடி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்தி உள்ளது. இந்திய கடற்படையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஹேமர் குண்டுகள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்பு
‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில்; “பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான தெளிவுகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன. தீவிரவாத கட்டமைப்புகள் தீவிரவாத முகாம்களை குறி வைத்தே இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா தற்போது எடுத்த நடவடிக்கை என்பது மிகைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல. இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை என்பது துல்லியமாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு நடவடிக்கை” என்று தெரிவித்தார்.
எதிர் நடவடிக்கை
அதைதொடர்ந்து விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் பேசினர். கமாண்டர் வூமிகா சிங் பேசுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் சரியாக துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. துல்லியமான உளவுத்துறை தகவல்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கையாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்துள்ளது” என்றார்.