ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தாக்குதல்

ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் எனும் பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 17 சுற்றுலா பயணிகள் காயங்களோடு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கண்டனம்

ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அஞ்சலி

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

தேடுதல் வேட்டை

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் விளக்கம்

இந்நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “பாகிஸ்தானுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம்” எனக் கூறியுள்ளார். தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட நிலையில், அதை பயங்கரவாதச் செயல் என்று விவரிக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here