தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, சட்டம் – ஒழுங்கில் தனி கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பான வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிகாலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவான்மியூருக்கு வரத் தொடங்கினார்கள். தவெக தலைவர் விஜய் பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்தபோது வழிநெடுக கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர். மண்டப நுழைவு வாயிலில் விஜய்க்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட 82 கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
தீர்மானங்கள்
காலை 10 மணி அளவில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன், இணை செயலாளர் தாஹிரா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசிய பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்பு
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் அதுபற்றி முறையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே சட்டம் – ஒழுங்கில் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூர் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.