தனது எக்ஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது குறித்து பாடகி ஸ்ரேயா கோஷல் இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இவரும் ஒருவர்

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரேயா கோஷல். பிரபல பாடகியான இவர் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். சமீபத்தில் உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக, “10 சதவீதம் எண்ணெயை குறைப்போம்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி 10 பேரை தேர்வு செய்தார். அதில் ஸ்ரேயா கோஷலும் ஒருவர்.

அனைத்தும் போலி

இந்நிலையில், பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது எக்ஸ் தளம் கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. இதைச் சரிப்படுத்த எக்ஸ் தள குழுவினரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களைத் தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை, உள்ளே நுழையவும் முடியவில்லை. எனவே, தயவுசெய்து எனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம், எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம், அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கும். எனது தளம் மீட்கப்பட்ட பிறகு தகவல் சொல்கிறேன்’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தளத்தில் 69 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here