1967, 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களை போல தமிழகத்தில் மீண்டும் ஒரு புரட்சி நடக்கும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோருக்கு தவெக தலைவர் விஜய் பெரியார் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
லெஃப்ட் ஹேண்ட் டீல்
விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில்; “மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட அரசியல் களத்தில் பயமின்றி வருகிற எதிர்ப்புகளை எல்லாம் லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிட்டு 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது தவெக. நம்முடைய கட்சியில் எல்லாரும் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். இருந்தால் என்ன.. அண்ணா கட்சி ஆரம்பித்தபோதும், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதும் அவர்கள் பின்னால் இருந்தது இளைஞர்கள் தான்.
நாங்க யார்னு அப்ப தெரியும்
நாட்டோட நலனை பற்றியோ, வளர்ச்சியை பற்றியோ கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் பணம் பணம்னு தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்ற வேண்டும். பெரிய பெரிய கட்சிகளுக்கு பூத் ஏஜெண்ட்கள் தான் பலம். நம்முடைய கட்சிக்கு பூத் கமிட்டி மாநாடு நடத்தப்போகிறோம். அன்றைக்கு தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்ததில்லை என்று.
“இது ரொம்ப தப்பு புரோ”
இப்போ புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள், மும்மொழிக் கொள்கை என்று. இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால், கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்களாம். இதைப்பார்த்தால் எல்கேஜி பசங்க சண்டை போட்டுக்கிற மாதிரி இருக்கு. இந்த ஃபாசிசமும், பாயாசமும், அதாங்க நம்ம அரசியல் எனிமியும், கொள்கை எனிமியும், பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுகிறார்கள். இவங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிற மாதிரி அடித்துக்கொள்வார்களாம் அதை மக்கள் நம்ப வேண்டுமாம். இது ரொம்ப தப்பு புரோ. நம்ம ஊரு சுயமரியாதைக்கான ஊரு. நம்ம எல்லா மொழியையும் மதிப்போம் அதற்கான மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி, வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி விடுவது. அதனால் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மும்மொழிக் கொள்கைகளை உறுதியாக எதிர்ப்போம்”. இவ்வாறு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேசினார்.