சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியார் மினி பேருந்து

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் சேவையை கருத்தில் கொண்டு தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்புடையதல்ல

இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; “சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வசதியை மேம்படுத்துங்கள்

சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக உயர்த்த வேண்டும். அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுப்போக்குவத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும்” என அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here