தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கோரி மனு அளித்தார்.
பேரதிர்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின. பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
முதல் சந்திப்பு
இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்திள்ளார். மேலும் அன்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.