தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வலுவிழந்தது
வங்கக்கடலில் கடந்த 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனைதொடர்ந்து நேற்று முன்தினமே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் புயலாக மாறாமல் வலுவிழந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் வலுவடைந்தது. இதையடுத்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மீண்டும் மாறியது
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் எனப் பெயர் கொண்ட இந்த புயல், நாளை பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.