தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
லட்சக்கணக்கானோர் பயணம்
அக்., 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பேருந்து, ரயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அக்., 28 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,092 பேருந்துகளுடன் 4,508 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்
இதனிடையே, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தீபாவளி முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை வரும் பயணியர் வசதிக்காக இன்று முதல் 4 ஆம் தேதி வரை தினமும் செல்லும் 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகள், பிற முக்கிய ஊர்களில் இருந்து 3,405 பேருந்துகள் என மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.